இயல்பு வாழ்க்கை பாதிப்பு இமாச்சலில் மேகவெடிப்பு நிலச்சரிவில் 2 பெண் பலி

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பெண்கள் உயிருடன் புதைந்து பலியானார். இமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில், குலு மாவட்டத்தில் உள்ள காடேல் கிராமத்தில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால், இப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு உருவாகி, நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 17 வயது இளம்பெண் உட்பட 2 பெண்கள் உயிருடன் மண்ணில் புதைந்து பலியானார். 10 கடைகள், 3 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு காரணமாக மண்டி-குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு குழுவினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தராகாண்டிலும் பாதிப்பு:  உத்தரகாண்ட் மாநிலத்திலும் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  பத்ரிநாத், யமுனோத்ரி,  கங்கோத்ரி ஆகிய இமயமலை வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவை மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் 160க்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

Related Stories: