அடல் ஓய்வூதிய திட்டத்தில் வரி கட்டுவோர் சேர முடியாது அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மக்களுக்கு பொதுவான சமூக பாதுகாப்பு அமைப்பை வழங்குவதற்காக கடந்த 2015ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா (ஏபிஒய்) திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இந்த ஓய்வூதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் வங்கியில் கணக்கை தொடங்கி, உறுப்பினர் ஆகலாம். இத்திட்டத்தில் 60 வயது முதல் ஆயுள் வரை கணக்குதாரருக்கும், அதன் பிறகு அவரின் வாழ்க்கை துணைக்கும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். இந்நிலையில், வரும் அக்டோபர் 1 முதல் வருமான வரி கட்டுபவர்கள் யாரும் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அப்படி அக்டோபருக்குப் பிறகு வரி செலுத்துவோர் யாரும் இந்தத் திட்டத்தில் இணைந்தது தெரியவந்தால் அந்தக் கணக்கு மூடப்பட்டு அதில் சேமிக்கப்படும் தொகை சந்தாதாரிடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் யோஜனாவில் இருக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மட்டும் 4.01 கோடி ஆகும்.

Related Stories: