கிரிப்டோ கரன்சி புழக்கம் உலக அளவில் அதிகரிப்பு: இந்தியாவுக்கு 7வது இடம்

ஐநா: இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் 7 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் கரன்சி வைத்துள்ளனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஏராளமானோர் இதில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் மூலம், வர்த்தகமும் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. கிரிப்டோ கரன்சி தொடர்பான கொள்கை முடிவுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான (யுன்டாக்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வளரும் நாடுகளில் புழக்கம் அதிகமாக உள்ளது. கடந்தாண்டில் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டில் முன்னணியில் உள்ள 20 நாடுகளில் 15 நாடுகள்  வளரும்  நாடுகளாக உள்ளன. இதில் 12.7 சதவீதத்துடன் உக்ரைன் முதலிடம், 11.9 சதவீதத்துடன் ரஷ்யா 2ம் இடம், 10.3 சதவீதத்துடன் வெனிசுலா 3ம் இடம், 9.4 சதவீதத்துடன் சிங்கப்பூர் 4ம் இடம், 8.5 சதவீதத்துடன் கென்யா 5ம் இடம், 8.3 சதவீதத்துடன் அமெரிக்கா 6ம் இடத்திலும் உள்ளன. இதில், இந்தியா 7ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியர்களில் 7 சதவீதத்தினர் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துகின்றனர். இவை நிலையற்ற நிதி சொத்துகளாகும். சமூகத்துக்கும் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியவை,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: