காஷ்மீர் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல்; மதுரை வீரர் உள்பட 4 பேர் வீர மரணம்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்முவில் ராணுவ முகாமுக்குள் புகுந்து தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், மதுரை வீரர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பின், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், அப்பாவி மக்களை சுட்டு கொல்கின்றனர். ராணுவ, விமானப்படை முகாம்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்படுகிறது. சில இடங்களில் ராணுவ வீரர்களையும் தீவிரவாதிகள் சுட்டு கொல்கின்றனர்.

தற்போது, நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 15ம் தேதி சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நாடு முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பாராகலில் அமைந்துள்ள ராணுவ முகாமுக்குள் நேற்று அதிகாலை 2 மணிக்கு, மோசமான வானிலையை பயன்படுத்தி 2 தீவிரவாதிகள் முகாமுக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்காக வந்திருப்பதை, அவர்களின் செயல்கள் மூலம் உணர்ந்த ராணுவ வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த சண்டையில், 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் மதுரை மாவட்டம், டி.புதுப்பட்டியை சேர்ந்த வீரர் லட்சுமணன் உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் நிஷாந்த்மாலிக் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இது குறித்து ஜம்மு மண்டல கூடுதல் இயக்குனர் முகேஷ் சிங் கூறுகையில், ‘அதிகாலை 2 மணி முதல் காலை 6.10 மணி வரை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் நடந்த முகாமுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார். 75வது சுதந்திரம் தின விழா இன்னும் 3 நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும், 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லட்சுமணனை இழந்த புதுப்பட்டி கிராம மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இவருடைய உடல், இன்றோ அல்லது நாளையோ கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: