இறந்து பிறந்த நிலையில் அடக்கம் செய்ய பணம் இல்லாததால் குழந்தை உடலை மூட்டையில் கட்டி குப்பை தொட்டியில் வீசிய தந்தை: போலீசார் மீட்டு அடக்கம் செய்தனர்

சென்னை இறந்து பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சாக்குமூட்டையில் கட்டி குப்பை தொட்டியில் தந்தையே வீசி சென்ற சம்பவம் திருவல்லிக்கேணியில் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையில் குப்பை தொட்டியில் நாய்கள் சாக்கு மூட்டை ஒன்றை இழுத்தபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி சாக்கு மூட்டையை பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டனர். குப்பை தொட்டியின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்திய போது, வாலிபர் ஒருவர் சணல் சாக்கு மூட்டையில் குழந்தையின் உடலை சுற்றிக்கொண்டு வந்து குப்பை தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் கவிதா என்பவருக்கு பிறந்த குழந்தை என தெரியவந்தது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கவிதாவுக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதனால் குழந்தையை அடக்கம் செய்ய அவரது தந்தை தனுஷ் என்பவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள் உத்தரவுப்படி ஒப்படைத்துள்ளனர். ஆனால், தனுஷ் குழந்தையை அடக்கம் செய்யாமல் சாக்கு மூட்டையில் சுற்றி குப்பை தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் தனுஷை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அடிக்கடி தனுஷ் சிறைக்கு சென்று வந்தவர் என தெரியவந்தது. இவர், முதல் மனைவியை பிரிந்து கவிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கவிதாவை திருமணம் செய்த பிறகு எந்த திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடாமல் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.  

கையில் ரூ.200 மட்டும் இருந்துள்ளது. இறந்த குழந்தையை அடக்க செய்ய மருத்துவமனை ஊழியர்கள் உடலை கொடுத்துள்ளனர். ஆனால் அடக்கம் செய்ய ரூ.2 ஆயிரம் பணம் தேவைப்படும் என்றதால் தனது குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே சிறிது நேரம் அழுதுள்ளார்.பிறகு தன்னிடம் இருந்த பணத்தை டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் சணல் சாக்கு ஒன்று வாங்கி குழந்தையின் உடலை சுற்றி கொண்டு வந்து சி.என்.கே. சாலையில் குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். குடும்ப வறுமை மற்றும் தனது குழந்தை இறந்த துக்கத்தால் தனுஷ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் தனுஷ் குழந்தையின் உடலை மீட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

Related Stories: