முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி: 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்

சென்னை: போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் உறுதிமொழி ஏற்கப்பட்டதை தொடர்ந்து, அது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதன்படி,

“போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.

நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்” என்று உறுதியேற்று கொண்டனர். போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசியா புக் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள்.

பின்னர், அமலாக்க பணியகம் - குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இந்த விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது.‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ தொடக்க விழாவில், எம்எல்ஏ ஜி.கே.மணி தர்மபுரியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதை பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றினார்.

அப்போது, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,  சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: