லாரிகளில் அதிக மணல் ஏற்றுவதை கண்டித்து 18ம் தேதி முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் அறிவிப்பு

சென்னை: மணல் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை அரசு தடுக்க வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் வரும் 18ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று எம்.சாண்டு மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறினார். சென்னையில் எம்.சாண்டு மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் யுவராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குவாரிகளிலிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான லாரிகளில் முற்றிலும் சட்டவிதி முறைகளுக்கு புறம்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு பலகோடி நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது லாரிகளில் அதிகபாரம் ஏற்றி செல்வதை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: