தனியார் நிறுவனங்களின் பால் லிட்டருக்கு ரூ.4 வரை இன்று முதல் உயர்கிறது: பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் தனியார்  நிறுவனங்கள் பால் விலையை இன்று முதல் குறைந்தபட்சம் ரூ.4 வரை உயர்த்துகிறது.  தமிழகத்தில் தினமும் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன. தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் வெறும் 16 சதவீதம் மட்டுமே பங்களிப்பதாலும், மீதமுள்ளவற்றில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவீதம் என்கிற நிலையில் இருப்பதாலும் பொதுமக்களும், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்களும் தனியார் பாலினையே சார்ந்திருப்பதால் அந்நிறுவனங்கள் தன்னிச்சையாக அடிக்கடி பால் விற்பனை விலையை உயர்த்துவதையும், கொள்முதல் விலையை குறைப்பதையும், வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தியது. இந்த நிலையில் 3-வது முறையாக தனியார் பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. இன்று முதல் சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் இன்று(12-ந்தேதி) முதல் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் பால் சார்ந்த உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயரும் நிலை உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

Related Stories: