பாவூர்சத்திரத்தில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை பராமரிக்க கோரிக்கை

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் பழுதடைந்து கிடக்கும் நூலக கட்டிடத்தை பராமரிக்க வேண்டுமென பாரதி வாசகர் வட்டம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் காமராஜர் நகர் தெற்கு பகுதியில் அரசு நூலகம் இயங்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்நூலகத்தை தினந்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஊருக்கு மையப்பகுதியில் இந்நூலகம் இருப்பதாலும், போக்குவரத்து இரைச்சல் இன்றி அமைதியாக படிக்கலாம் என்பதாலும் நூலகம் ஆரம்பித்த புதிதில் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர்.

தற்போது இந்நூலக கட்டிடமானது பழுதடைந்து காணப்படுவதாக வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடம் என்பதாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது. நூலகத்தை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்தும், கதவுகள் உடைந்தும் காணப்படுகின்றன.

வண்ணம் பூசப்படாமல் பாழடைந்த கட்டிடம் போல் காணப்படுவதாலும், மழை தண்ணீர் கசியும் அபாயம் இருப்பதாலும் நூலகத்திற்கு படிக்க வரும் வாசகர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதனால் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது. எனவே இந்நூலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதி வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: