சிங்கப்பூரிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.: அடுத்த 90 நாட்கள் தாய்லாந்தில் தஞ்சம் என தகவல்

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதை அடுத்து அவர், சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், கொழும்புவில் உள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

அதனையடுத்து, போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13-ம் தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். மாலத்தீவு நாட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அங்கிருந்து ஜூலை 14-ல் சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினர்.

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி இன்றுடன் காலாவதியானது.  இந்தநிலையில், சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்குச் செல்ல விரும்பி அந்நாட்டின் அனுமதியை கோத்தபய ராஜபக்சே கோரி இருந்தார். உயர் பதவி வகிப்போருக்கான தூதரக பாஸ்போர்ட் உள்ளதால் 90 நாள் வரை தாய்லாந்தில் தங்கலாம் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது.  தற்போது தாயலாந்துக்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளதால் கோத்தபய ராஜபக்சே இன்று செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: