தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அதோடு, பழைய கோயில்களை சீரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்துவது, காணாமல் போன கோயில் சிலைகளை மீட்பது என பல  முன்னெடுப்புகளை இந்துசமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில்  இணையத்தில் பதிவேற்றம் செய்யும் புது நடைமுறையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.

தக்கோலம் பகுதியில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட அழகு பெருமாள் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் 58 வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக்கிரமிக்கப்பட்ட அழகு ராஜா பெருமாள் கோயில் நிலத்தை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நித்யா தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 10 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தெந்த பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: