வேலூரில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைத்த அவலம்

வேலூர்: வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பல்வேறு முறைகேடு ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், போர்வெல் பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றிய விவரம்: வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் 19வது வார்டு சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில் போர்வெல் (கை பம்பு) தற்போது பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்தது. 3 நாட்களுக்கு முன்பு போல்வெல்லுடன் தடுப்பு சுவரை ஒப்பந்ததாரர் அமைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையறிந்த மேயர் சுஜாதா உத்தரவுப்படி மாநகராட்சி குழுவினர் கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவரை உடைத்து போர்வெல் மேல்பாகத்தை அகற்றினர். தற்காலிகமாக போர்வெல் குழாய் மூடப்பட்டது. போர்வெல்லின் உயரத்தை உயர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கு காரணமான ஒப்பந்ததாரர் குட்டி என்கிற சுரேந்தரின் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தும், நிலுவையில் உள்ள எந்த பணிகளையும் மேற்கொள்ள தடை விதித்தும் மேயர் உத்தரவிட்டார். மேலும் பணியை சரிவர கவனிக்காத 2வது மண்டல உதவி பொறியாளர் செல்வராஜிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாநகராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தங்கள் விடப்பட்டது. அதில் குட்டி என்கிற சுரேந்தர் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இவருக்கு கான்கிரீட் குறித்து ஒன்றுமே தெரியாது. அவர் பர்மா பஜாரில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர்.

அவரை அழைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அதிமுகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் ரூ.10 கோடிக்கு வேலை எடுத்துள்ளனர். அவர்களுக்கு வேலையே தெரியாது. அவர் சத்துவாச்சாரியில் கால்வாய் அமைக்கும்போது போர்வெல் மீது கான்கிரீட் போட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக ஒப்பந்ததாரர்கள் இவ்வாறு செயல்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: