75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்

திருவனந்தபுரம்: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடுக்கி அணையிலிருந்து நேற்று இரவு மூவர்ணங்களில் தண்ணீர் வெளியேற்றப்ட்டது அனைவரையும் கவர்ந்தது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதையொட்டி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு கட்டிடங்கள், பாலங்கள் உட்பட பல்வேறு பகுதிகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதன் முதலாக கேரளாவில் உள்ள இடுக்கி அணையிலிருந்து மூவர்ணங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

கேரளாவில் உள்ள மிகப்பெரிய இந்த அணை திறக்கப்படுவது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். நீர் மின்சாரம் தயாரிக்கப்படுவதற்காக மட்டுமே இந்த அணை கட்டப்பட்டதால் பெரும்பாலும் இந்த அணை திறக்கப்படுவதில்லை. அபாய அளவை எட்டினால் மட்டுமே இந்த அணை திறக்கப்படும். 1992ல் அணை திறக்கப்பட்டதற்குப் பின்னர் 26 வருடங்கள் கழித்து 2018ல் தான் இந்த அணை மீண்டும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கன மழை காரணமாக கடந்த வாரம் முழு கொள்ளளவை நெருங்கியதை தொடர்ந்து அணை திறக்கப்பட்டது. ஆனாலும் அணைக்கு நீர்வரத்து குறையாததால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிக அபூர்வமாக திறக்கப்படும் இடுக்கி அணையில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அணையின் மேல் பகுதியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் மூவர்ண பல்புகள் பொருத்தப்பட்டன. நேற்று இரவு இடுக்கி அணையிலிருந்து மூவர்ணங்களில் தண்ணீர் வெளியேறியது அனைவரையும் கவர்ந்தது. இந்த புகைப்படத்தை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

Related Stories: