65 சதவீதம் பெண்கள் உழைக்கின்றனர் 91 சதவீதம் ஆண்கள் சம்பாதிக்கின்றனர்: நடிகை சுஹாசினி பேச்சு

ஈரோடு: ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவிழாவில் நேற்று மாலை கலந்து கொண்ட திரைப்பட நடிகை சுஹாசினி ‘நிமிர்ந்த நன்னடை’ என்ற தலைப்பில் பேசியதாவது: மனதில் இருப்பதை வெளியில் சொல்லவும், அதனை எழுதவும், அந்த எழுத்தை பிறர் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் தைரியம் வேண்டும். பாடம் கற்றுக்கொடுப்பது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல, மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அதை ஊக்குவிப்பது என்ற பணியை தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் 65 சதம் பேர் உழைக்கின்றனர். ஆண்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே உழைக்கின்றனர். ஆனால் வருமானத்தில் 91 சதவீதத்தை ஆண்கள் ஈட்டுகின்றனர். 9 சதவீதத்தை மட்டுமே பெண்கள் ஈட்டுகின்றனர். இந்தியாவில் வேலைக்கு செல்லும் 55 சதவீத பெண்களில் 45 சதவீதம் பேர் ஓராண்டிலேயே அந்த வேலையை விட்டுவிடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இதற்கு வீட்டிலும், வெளியிலும், பணியாற்றும் இடத்திலும் காரணங்கள் ஏராளம் உண்டு. மற்றவர்களின் உணர்வுகளை, மன நிலையை அருகில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிறர் மனதை காயப்படுத்தாமல் வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தனக்கான மரியாதையை, தைரியத்தை இழந்துவிடக்கூடாது. இன்றைய இளைஞர்களுக்கு தோல்வியை சந்திக்கும் மனப்பக்குவம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் தான் முயற்சி செய்யவும் தயக்கம் காட்டுகின்றனர். தோல்விகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை, முயற்சிகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு சுஹாசினி பேசினார். நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின்குணசேகரன், பேராசிரியை இளம்பிறை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: