அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர்  பக்கிரி. இவரது மனைவி ராஜகுமாரி. இவருக்கு அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள 10,246 சதுரடி  நிலம் உள்ளது.  அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்டேவிட் குமார் (48), ஆனந்தராஜ் (53). இவர்கள், ராஜகுமாரிக்கு சொந்தமான நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து, தனியார் பில்டரான ரபி ஜெயக்குமாருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த  ராஜகுமாரி, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின்  உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராஜகுமாரியின் நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பில்டர் ரபி ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 3 பேரையும் திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

நிலம் விற்பனை மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்க பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்த பத்திரப்பதிவு துறை மற்றும்  வருவாய் துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: