போதை பொருட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடை கட்டி, சங்கு முழங்க மாணவர்கள் நூதன பிரசாரம்

பெரம்பூர்: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போதை பொருட்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை எம்கேபி.நகர் போலீசாருடன் இணைந்து அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் நூதன முறையில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்டி.சேகர், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தனர். இதையடுத்து போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த பேரணியில், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீ மைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள், போதை பொருட்களை பயன்படுத்தினால் இளம் வயதிலேயே மரணத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் வகையில், இறுதி ஊர்வலம் நடப்பது போலவும் சங்கு ஊதியும் அதில் போதை பொருட்களை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்தது போலவும் சித்தரித்து வீதி, வீதியாக கொண்டு சென்றனர்.

போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கினர். ஊர்வலத்தை தொடர்ந்து என்கேபி.நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ‘’போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்’’ என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வர்கீஸ், போக்குவரத்து காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: