ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவிற்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்: டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

சேலம்: கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் வரும் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப் படுகிறது. இப்பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள், ரயில்களில் அதிகளவு செல்வது வழக்கம். இதற்காக முக்கிய நகரங்களில் இருந்து ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் வழியே கேரளாவிற்கு மேலும் 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06046) வரும் 1ம் தேதி இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு வழியே சேலத்திற்கு அடுத்தநாள் காலை 6.12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-எர்ணாகுளம் ஓணம் சிறப்பு ரயில் (06045) வரும் 2ம் தேதி இயக்கப்படுகிறது. சென்னையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து, பின்னர் ஈரோடு, போத்தனூர் வழியே எர்ணாகுளத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடைகிறது.

தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில் (06041) வரும் 2ம்தேதி இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்தரயில், சேலத்திற்கு இரவு 7.22 மணிக்கு வந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு வழியே மங்களூருக்கு அடுத்தநாள் காலை 6.45 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரயில் (06042) வரும் 3ம் தேதி இயக்கப்படுகிறது. மங்களூரில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு இரவு 9.35 மணிக்கு வந்து, பின் தாம்பரத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு சென்றடைகிறது.

தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) வரும் 4ம் தேதி இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 10.50 மணிக்கு வந்து, ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06044) வரும் 5ம் தேதி இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.25 மணிக்கு வந்து, பின் தாம்பரத்திற்கு காலை 10.55 மணிக்கு சென்றடைகிறது.

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06048) வரும் செப்டம்பர் 11ம் தேதி இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியே சேலத்திற்கு அடுத்தநாள் காலை 6.52 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை எழும்பூருக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ஓணம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (11ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது.

Related Stories: