பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது

துரைப்பாக்கம்: பேடிஎம்மின் கியூஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி பண மோசடி செய்த ஊர்க்காவல் படை வீரர் சிக்கினார். சென்னை துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(32). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர், சாப்பிட்டுவிட்டு  பேடிஎம் செய்ய கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர்.

‘’வாடிக்கையாளர்களிடம் இருந்து கியூ.ஆர் கோடு மூலம் பணம் பரிமாற்றம் ஆகவில்லை, மோசடி நடந்துள்ளதும் என்றும் கீயூ.ஆர் கோடு ஸ்டிக்கருக்கு பதிலாக வேறொரு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதாகவும் அதனால் தனக்கு 3 ஆயிரம்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்று கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆனந்த் புகார் அளித்தார். இதன்படி, சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், இந்த மோசடியில் ஈடுபட்டது கண்ணகி நகரை சேர்ந்த வெங்கடேஷ்(21) என்பதும் இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராகவும் இருப்பதாகவும் கியூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்டி பண மோசடி செய்தது அம்பலமானது. மேலும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றுவதாக போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், ‘’அடையாறு காவல் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் கியூ.ஆர் கோட் ஸ்டிக்கர் ஒட்டி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்’ என்று தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கியூ.ஆர் கோடு ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: