ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய அரசின் சாதனை என்பதா?: கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்வி

சென்னை: நாட்டில் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய பாஜ ஆட்சியின் சாதனை என்பதா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், 1947ல் விடுதலைப் பெற்று உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடிமறைக்க நாடு முழுவதும் மதரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கின்றன. அதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நம்பகத்தன்மைமிக்க ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 2021 நிலவரப்படி 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102ல் இருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து ரூ.53.16 லட்சம் கோடியாக இருமடங்கு பெருகியிருக்கிறது.

பாஜக ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பாஜகவின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளனது.

இதுதான் 8 ஆண்டு மோடி ஆட்சியின் சாதனை என்பதா? மெகா ஊழல் என்பதா?: எனவே, 75வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற அதேநேரத்தில் இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்கிற போது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது. இத்தகைய அழிவு பாதையிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது.

Related Stories: