சிவகளை அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு: வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைப்பது இதுவே முதல் முறை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்படுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தாலான பொருட்கள், சங்கு பொருட்கள், நெல் மணிகள் போன்றவை கண்டறியப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகளானது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது. சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அகழாய்வுகள் நடக்கின்றன. சிவகளை பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தங்கப் பொருள், தக்களி, பாசிகள் கிடைத்தன. ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கம் கிடைத்தது; சிவகளையில் வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைத்துள்ளது. வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: