திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்பு 152 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில்,  போதைப்பொருட்கள் தடுப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் போதைப்பொருட்கள் எளிதாக கிடைத்து வந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் தயார் செய்யவில்லை என்றாலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. 2013 முதல் 2022 ஜூன் மாதம் வரை சுமார் ரூ.38.99 கோடி மதிப்புள்ள 952.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஆண்டு ஜூன் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் மீது கம்பவுன்ட் அபன்ஸ் என்னும் தலைப்பின்கீழ் 2013 முதல் 2022 ஜூன் வரை ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஜூன் மாதம் வரை ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2022 ஜூன் வரை சுமார் 1308 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 1093 மாதிரிகள் தரமற்றதாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் இடப்பட்டதாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும்  தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் ரூ.58.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: