சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்த வழக்கு சென்னை கோர்ட்டுக்கு மாற்றம்

சேலம்: சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கு, ஓமலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ் (25), எருமாப்பாளையத்தை சேர்ந்த பிசிஏ பட்டதாரி நவீன்சக்கரவர்த்தி(25) ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஓமலூர் போலீசில் இருந்த இந்த வழக்கு, சேலம் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

அவர்களும் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆயுதம் தயாரித்த வழக்கு என்பதால் என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அனுமதி கோரி ஓமலூர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஓமலூர் நீதிமன்றம் வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை இனி சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்படும். முதல் விசாரணை இன்று (வியாழன்) சென்னை நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இதற்காக கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்கின்றனர்.

Related Stories: