மாணவி மர்ம மரணம் வழக்கில் திடீர் திருப்பம்; பள்ளி நிர்வாகிகளால் சிறையில் ஆசிரியை உயிருக்கு ஆபத்து: வேறு சிறைக்கு மாற்றக்கோரி தந்தை மனு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பமாக, பள்ளி நிர்வாகிகளால் ஆசிரியை உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தில் அவரது தந்தை புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, கணித ஆசிரியர் கிருத்திகா, வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமீன் கோரி கடந்த 28ம் தேதி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் மீதான விசாரணை நேற்று நீதிபதி (பொ) சாந்தி முன்னிலையில் வந்தது. அப்போது அவர்களின் வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலம் கருதி ஜாமீன் வழங்க வேண்டும், என்றார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் உடற்கூறு பற்றிய ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு அறிக்கை இன்னும் எங்களிடம் வழங்கப்படவில்லை. அதன் பிறகு தான் இவர்கள் மீது என்ன பிரிவில் வழக்கு போடுவது என்று முடிவு செய்யப்படும். அதுவரை ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியர் கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியோருடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கிருத்திகாவிற்கு சிறையிலேயே பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்த நீதிபதி, வரும் 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ளது பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: