ஆருத்ரா, எல்பின், ஐஎப்எஸ் ஆகிய 3 நிதி நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் 1.80 லட்சம் பேர் ரூ.13,125 கோடி முதலீடு செய்து ஏமாற்றம்

சென்னை: சென்னை ஆருத்ரா, திருச்சி எல்பின், வேலூர் ஐஎப்எஸ் ஆகிய 3 நிதி நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் 1.80 லட்சம் பேர் ரூ.13,125 கோடி முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். விரைவில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் முதலீடு செய்த பணம் திரும்ப பெற்று தரப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஆருத்ரா கோல்டு’ நிதி நிறுவனத்தில் 93 ஆயிரம் பேர் ரூ.2,125 கோடி முதலீடு செய்துள்ளனர். திருச்சியை தலைமை இடமாக கொண்டுள்ள ‘எல்பின்’ நிதி நிறுவனத்தில் 7 ஆயிரம் பேர் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். அதேபோல், வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் பேர் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த 3 நிதி நிறுவனங்களும் 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது.

எனவே, இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை கைது செய்ய தனிக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.  முக்கியமாக, அந்த நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்குவது, அந்த நிதி நிறுவனங்கள் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி உள்ளார்களோ அதை கண்டுபிடித்து மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பிறகு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பணத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் இதுபோன்று ஏமாற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யாமல், ரிசர்வ் வங்கி அனுமதி  அளித்துள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலேயே  முதலீடு செய்து பயன்பெற வேண்டும். ரிசர்வ் வங்கி விதித்துள்ளபடி ஆண்டுக்கு 5.5 சதவீத வட்டி விகிதங்கள் வழங்க வேண்டும் என்றும், வங்கிகள் இல்லாத நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம். இது பொதுமக்களுக்கு வட்டியாக கொடுப்பது, அதை தாண்டி ஒரு அளவுக்கு இருக்கலாம்.  

அதற்கு மேலாக வட்டி என்பது சாத்திய கூறுகள் இல்லை.  ஒன்றிய அரசு ஒரு சட்டம் தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு நிதி நிறுவனம் செயல்படுத்த முடியாத திட்டங்களை அமல்படுத்துகிறது என்று சொன்னால், காவல் துறையினர் அதன் மீது விசாரணை நடத்தி, இந்த திட்டம் சாத்தியமற்றது, திட்டத்தில் பயணளிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என கூறி தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்யலாம். இதுவரை இந்த மூன்று நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களிடம் ஏமாற்றிய பணத்தில் ஆடம்பர கார்கள், மாளிகைகள், நிலங்கள், காலி இடங்களை வாங்கி குவித்துள்ளன. மோசடிக்குள்ளான ஆருத்ரா நிதி நிறுவனத்தின் 85 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் பெயரில் ரூ.125 கோடிக்கான சொத்துகள் இருப்பதற்கான இடங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளோம்.  திருச்சியை தலைமையிடாக  கொண்டு செயல்பட்ட எல்பின் நிதி நிறுவனத்தில் 100 கோடி ரூபாய்க்கான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது.

எல்பின் நிதி நிறுவனத்தில் 18 பேரை கைது செய்து இருக்கிறோம். ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் ரூ.27 கோடி முடக்கியுள்ளோம். இந்த நிதி நிறுவனத்தின் சொத்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிதி நிறுவனத்தில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதற்கான பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 3 நிதி நிறுவன உரிமையாளர்கள், நிர்வாகிகளை கைது செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஆருத்ரா நிதி நிறுவனத்தின் 6 நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் 4 பேர் வெளிநாடுகள் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: