கும்பகோணத்தில் வெளிநாடு கடத்த பதுக்கல்; 1000 ஆண்டுகள் பழமையான 8 ஐம்பொன் சிலைகள் மீட்பு: சென்னையை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்தும் வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 ஆண்டுகள் பழமையான ஆண்டாள், புத்தர் என 8 ஐம்பொன் சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணத்தில் மீட்டனர். ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், அங்கு சிலைகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மாசிலாமணியை பிடித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த சிலைகளை கும்பகோணத்திற்கு எடுத்து சென்று வெளிநாடுகளுக்கு கடத்தி பல கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது  தெரியவந்தது.உடனே, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், மாசிலாமணியை அழைத்து சென்று கும்பகோணம் சர்வமானய தெருவில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி மதிப்புள்ள போகசக்தி அம்மன் சிலை, நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, ஆண்டாள் சிலை, சிவகாமி அம்மன் சிலை, விஷ்ணு, நடராஜர், ரமணமஹரிஷி என 8 பழங்கால சிலைகள் மற்றும் பழங்கால சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது என்று போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், ரமண மஹரிஷி சிலையை தவிர மற்ற 7 சிலைகளும் 1000 ஆண்டுக்கு மேல் பழமையானவை என்று தெரியவந்தது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, மீட்கப்பட்ட சிலைகள் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பிடிபட்ட மாசிலாமணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.c

Related Stories: