மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது: முதல்வர் வழங்குகிறார்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா.ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக மாவட்ட ஆட்சி தலைவர், மருத்துவர், வேலைவாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாராத தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு சிறந்த மாவட்ட ஆட்சியர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர் கலெக்டர்), அ.அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம் கலெக்டர்), சிறந்த மருத்துவர் - பா.ஜெய்கணேஷ் மூர்த்தி (உதகை), சிறந்த நிறுவனம் - ரெனேசான்ஸ் அறக்கட்டளை (புதுக்கோட்டை), சிறந்த சமூக பணியாளர் - சு.அமுதசாந்தி (மதுரை), மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் - டாபே ஜெ ரிஹாப் சென்டர் (புதுக்கோட்டை), சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (திண்டுக்கல் மாவட்டம்) ஆகியோர் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் (மாவட்ட ஆட்சியர் தவிர) 2022ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.  மாவட்ட ஆட்சியருக்கான விருதை, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: