இந்தியாவின் கடும் எதிர்ப்பு, தடைகளை மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகை: 750 கிமீ நோட்டமிடும் என்பதால் உஷார்நிலை

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும், இலங்கை அரசின் தடையையும் மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற உளவுக்கப்பல்  அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு நாளை வந்து வரும் 17ம் தேதி வரை முகாமிட்டு, செயற்கைக்கோள் கண்காணிப்பு, உளவு பணிகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியானது. இலங்கையில் இருந்து 750 கிமீ சுற்றளவுக்கு இந்த கப்பலால் உளவு பார்க்க முடியும் என்பதால், தமிழகத்தில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு மின்நிலையம் உள்ளிட்ட ஆய்வு மையங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த கப்பலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, உளவு கப்பல் தனது நாட்டுக்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இந்த பயணத்தை சிறிது காலம் ஒத்திவைக்கும்படியும் கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தனது தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்படவில்லை.  இந்நிலையில், கடந்த ஜூலை 13ம் தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட உளவு கப்பல், சில நாட்களுக்கு முன் தைவான் கடலில் முகாமிட்டு இருந்தது. அங்கிருந்து புறப்பட்ட இக்கப்பல், இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது, இன்று இலங்கைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா உஷார்நிலையில் உள்ளது.

Related Stories: