உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார். தற்போது பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவரின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தனக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த வாரம் என்.வி.ரமணா பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்படுகிறார். வரும் 27ம் தேதி முதல் அவர் தனது பணியை தொடங்குவார்,’ என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார். வரும் 27ம் தேதி பதவியேற்கும் யு.யு.லலித், 74 நாட்கள் மட்டுமே இப்பதவியில் நீடிப்பார். நவம்பர் 8ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்த யு.யு.லலித், தனது வழக்கறிஞர் பணியை 1983ம் ஆண்டு தொடங்கினார்.

Related Stories: