விண்வெளியில் சுற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் தலையை பதம் பார்க்கும்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆபத்து

டொரான்டோ: உலகின் பெரும்பாலான நாடுகள் பருவநிலை, பாதுகாப்பு, புவி கண்காணிப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை ஏவி வருகின்றன. இவற்றில் பல காலாவதியாகிவிட்டன. இவையும், இவற்றை விண்வெளியில் நிலை நிறுத்துவதற்காக சென்ற ராக்கெட்டுகளின் உதிரி பாகங்களும், விண்வெளியில் கழிவுகளாக சுற்றி வருகின்றன. இந்நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் கழிவுகள் மனிதர்கள் மீது விழுந்து பலி அல்லது காயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. ‘பெரும்பாலும் ராக்கெட்டில் இருந்து பிரியும் பாகங்களில் சில எரிந்து விடும். எஞ்சியவை விண்வெளி சுற்று வட்டப்பாதையில் சுற்றுகின்றன. இந்த கழிவுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்கள் மீது விழுந்து காயம் ஏற்படுத்த 6- 10 சதவீதம் வாய்ப்புள்ளது. நியூயார்க், பீஜிங், மாஸ்கோ நகரங்களை விட, ஜாகர்தா, தாகா, லாகோஸ் நகரங்களில் விழுவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு அதிகமாக உள்ளன. இந்த கழிவுகளை சுற்று வட்டப் பாதையில் இருந்து அகற்ற, உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்,’ என்று அதன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: