நிதி மோசடி செய்து தப்புவதை தடுக்க 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் விவரம் தரணும்: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: நிதி மோசடிகளில் ஈடுபடுவோர் தப்பிப்பதை தடுக்க வெளிநாடு செல்லும் பயணிகளின் விவரங்களை 24 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிவிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* ஒவ்வொரு விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் பயணிகளின் முழு விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

* வெளிநாடு செல்பவரின் பெயர், டிக்கெட் வாங்க பணம் செலுத்திய தகவல், கிரெடிட் அட்டை எண், பயணச்சீட்டு வழங்கிய தேதி, பிஎன்ஆர் எண், செல்போன் எண் உள்பட 19 தகவல்களை விமான நிறுவனங்கள்  அளிக்க வேண்டும்.

* இந்த உத்தரவை கீழ்படியாமல் தகவல் தெரிவிக்க தவறிய நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள், நாட்டை விட்டு தப்பி செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* டிக்கெட் கட்டணம் கட்டுப்பாடு இல்லை

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்ட போது, உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணங்களை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயம்  செய்தது. இதில், 40 நிமிடங்களுக்கு குறைவாக இருக்கும் விமான பயணத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2,900ம் அதிகபட்சமாக ரூ.8,800 ம் ஆக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா டிவிட்டரில் பதிவில், ‘வரும் 31ம் தேதி முதல் விமான கட்டணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இந்த உத்தரவால் விமான நிறுவனங்களே இனி கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளும்.

Related Stories: