பல மாநிலங்களில் தொடரப்பட்ட நுபுர் சர்மா வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் ஒன்றாக இணைத்து டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பாஜ செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து கூறிய சர்ச்சை கருத்தால் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கடும் கண்டனங்கள், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அதனால் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜ தலைமை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநில நீதிமன்றம் மற்றும் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது.

நாட்டில் உள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற நுபுர் சர்மாவின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து நுபுர் சர்மா நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்’ எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவரது மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து டெல்லி காவல்துறைக்கு மாற்றியமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: