காங்கிரஸ் மீது மோடி தாக்கு கருப்பு மேஜிக்கால் ஏமாற்ற முடியாது

பானிபட்: ‘கருப்பு மேஜிக் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது’ என்று காங்கிரசை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார். அரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்புள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கடந்த 5ம் தேதி  விரக்தியின் வெளிப்பாடாக சிலர் ‘கருப்பு மேஜிக்’ செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. கருப்பு ஆடையை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கையில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியாது’’ என்றார். விலைவாசி உயர்வை கண்டித்து கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்திய காங்கிரசை மறைமுகமாக சாடும் வகையில் மோடி இவ்வாறு பேசினார். ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு: பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது’’ என்று மோடி தெரிவித்தார்.

* வார்த்தை ஜாலக்காரர்

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில், ‘வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை அவர்களால் மீட்க முடியவில்லை. ஆனால் கருப்பு துணிகள் பற்றி தேவையற்ற கருத்துகளை அவர் கூறி வருகிறார். தங்களுடைய பிரச்னைகளை பற்றி பிரதமர் பேச வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வார்த்தை ஜாலக்காரர்(ஜூம்லாஜீவி) ஏதேதோ பேசி வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: