கடலூரில் இரவு நேர தூய்மை பணி தீவிரம்: ஆற்றங்கரையோர குப்பைகளை அகற்ற நடவடிக்கை

கடலூர்: கடலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இரவு நேர தூய்மை பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகளை கொண்டது. இந்நிலையில் நாள்தோறும் 100 டன் அளவிற்கு குப்பைகள் சேருகிறது. இதனை அப்புறப்படுத்தும் பணிக்காக குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது குப்பைகளை தரம் பிரித்து அதனை அப்புறப்படுத்துவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் அதிக அளவில் குப்பைகள் சேரும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று கெடிலம், பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்றங்கரை ஓரம் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக வந்த தொடர் புகார்கள் தொடர்ந்து நீர்நிலைகள் மாசு ஏற்படா வண்ணம் அப்பகுதியில் உள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்ற இரவு நேர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையர் நாவேந்திரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இது போன்று அதிக அளவில் குப்பைகள் சேரும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

விரைவில் கடலூர் முழுமையாக குப்பைகள் இல்லா மாநகரமாக மாற்றிடவும் தொடர்ந்து குப்பைகளை தரம் பிரித்து உடனுக்குடன் கிடங்கு பகுதியிலிருந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். மாநகர செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் சங்கீதா குமரன், சங்கீதா செந்தில் முருகன், பிரசன்னா, இளையராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: