மழைநீர் சேகரிப்பு குளத்தில் கழிவுநீர் கலப்பு: தூர்வார கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சிலுவத்தூர் சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு குளத்தை தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் முத்துசாமி குளம், சிலுவத்தூர் சாலை குளம், கோட்டைகுளம், கோபால் சமுத்திரம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. எட்டு வருடங்களுக்கு முன்பு இந்த குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்றியமைக்கப்பட்டது.

சிலுவத்தூர் சாலை குளத்தை சுற்றியுள்ள நாராயணதாஸ் காலனி, கே.கே.நகர், ஏ.ஆர்.நகர், உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்து நீரில் கலந்து விடாமல் இருப்பதற்காக, குளத்தை சுற்றிலும் தனியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் தெற்குப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சேர்ந்துள்ள குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மழைக்காலங்களில் இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு மழை பெய்த போது, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குளத்தில் கழிவுநீர் கலந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குளக்கரையில் நடைப்பயிற்சி செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதியும், நிலத்தடி நீர்மட்டம் மாசடைவதை தடுக்கவும் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். மேலும் குளத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: