ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா பூங்காவில் அழுகி உதிரும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி உதிர்கின்றன. இதனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்குவரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் இந்த பூங்காக்கள் எப்போதும் பொலிவுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, முதல் சீசனின் போது, ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள 40 ஆயிரம் மலர் செடிகளிலும் பல்வேறு வகையான ரோஜா மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். அதேபோல், இரண்டாம் சீனின் போதும் பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் இரண்டாம் சீசன் துவங்குகிறது. இதற்காக ஊட்டி விஜய நகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்த நிலையில் பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் இருந்த ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன. மழை குறைந்த நிலையில், அழுகிய மலர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். எனினும் ஒரு சில செடிகளில் மலர்கள் இருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன. தற்போது செடிகளில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Related Stories: