திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி

ஸ்ரீகாளஹஸ்தி: சென்னை அடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பிரியங்கா (30), எம்.இ. படித்துள்ளார். கடந்த வாரம் பிரியங்காவிற்கு பெரியோர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. இவருக்கு திருப்பதி அல்லது திருமலையில் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்தனர். இதற்காக மண்டபத்தை முன்பதிவு செய்ய பிரியங்கா, அவரது பெற்றோர் மற்றும் சித்தப்பா மகன் ராஜூ ஆகியோர் நேற்று முன்தினம் சொகுசு காரில் திருப்பதிக்கு வந்தனர். நகரி வரை அவரது தந்தை, காரை ஓட்டியுள்ளார். பின்னர் பிரியங்கா காரை ஓட்டினாராம்.

திருப்பதி மாவட்டம், அஞ்சேரம்மன் கோயில் அருகில் உள்ள வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பிரியங்கா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது பெற்றோர் காயமின்றி தப்பினர். தகவலறிந்த வடமாலப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: