சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஹேண்ட் பிரேக் போடாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக முன்னோக்கி சென்றதில் எதிரே இருந்த 4 வயது சிறுவன் மீது மோதியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36) இவரது மகன் ரித்விக் வயது (4). நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுத்தப்படுத்துவதற்காக தனியார் தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டது. கோயிலை வந்தடைந்த லாரியின் ஓட்டுநர் லாரி  முன்புறம் நகராமல் இருக்க ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தியுள்ளார். அப்போது ரோடு ஓரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக தானாக முன்னோக்கி சென்ற நிலையில் அங்கு விளையாடிய சிறுவன் ரிதிவிக் மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனுடன் விளையாடி கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.       

Related Stories: