தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?

திருமலை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ஜெயசுதா. இவர் தெலுங்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்து ஐதராபாத்தில் குடியேறினார்.

கடந்த 2001ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஜெயசுதா, ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரசில் இணைந்தார்.  ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்தபோது ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிலையில், 2009ம் ஆண்டு தேர்தலில் ஜெயசுதா செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்திற்கு பிறகு கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன்பிறகு 2016ல் தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் சமீப காலமாக அரசியலில் இருந்து நடிகை ஜெயசுதா ஒதுங்கியிருந்தார்.

இதற்கிடையே ஜெயசுதாவை பாஜவில் சேர்க்க அக்கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். பாஜவில் நடிகர், நடிகைகளை சேர்க்கும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் குஷ்பு, தெலங்கானாவில் விஜயசாந்தி என இந்த வரிசையில் ஜெயசுதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெயசுதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா பாஜ தலைவர்களில் ஒருவரான ராஜேந்திராவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜவில் இணைய சம்மதித்துள்ளதாகவும் விரைவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: