பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம்  மாவட்டத்தின் 30வது மாநாடு   காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் எல்.முருகேசன் சங்க கொடி ஏற்றிவைத்தார். காஞ்சிபுரம் வட்டச்செயலாளர் என்.நந்தகோபால் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம் தீர்மானம் வாசித்தார். மாநில பொருளாளர் பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் நேரு வேலை அறிக்கை, பொருளாளர் பெருமாள் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் மோகனன் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக, மாவட்ட நிர்வாகிகள் டி.லிங்கநாதன், வி.சுகுமார், எஸ்.ஆனந்தன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், வாய்க்கால்களை ஆழப்படுத்தி தூர்வாரி விவசாயிகளின் பாசன ஆதாரத்தை உறுதிப்படுத்தவேண்டும்.

வெண்கொடி, வெங்கடாபுரம் மற்றும் குருவிமலை-ஓரிக்கை எல்லை பகுதிகளில் பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாத்திடவேண்டும். நெல்கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப திறக்கவேண்டும். உர தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்களை மீண்டும் இயக்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, புதிய மாவட்ட தலைவராக என்.சாரங்கன், செயலாளராக கே.நேரு, பொருளாளராக வி.கே.பெருமாள், துணை தலைவர்களாக வி.சுகுமார், எல்.முருகேசன், துணை செயலாளர்களாக  டி.லிங்கநாதன், என்.நந்தகோபால் உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் பி.கே.வேணுகோபால் நன்றி கூறினார்.

Related Stories: