திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்யப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி. பெகர்லா செபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரின் உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீஸ்காரர்கள் ரகு, அருண் ஆகியோர் திருப்பாச்சூர், சிறுவானூர் பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது, திருவள்ளூர் அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சென்று சோதனை செய்தனர்.  

அங்குள்ள ஒரு கடையில் இருந்த வெள்ளை நிற சாக்கு பையில் போலீசார் சோதனை நடத்தியபோது போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அங்கிருந்து 4, 100 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: