இறந்த கணவர் மீண்டும் வருவார் என கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி; போலி மந்திரவாதிக்கு வலை: பலரை உயிர்ப்பித்து தந்ததாக கூறி நாடகம்

திருமலை: இறந்த கணவரை உயிருடன் வரவழைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த போலி மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள தொட்சர்லா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரவம்மா. இவரது கணவர் சுதாகர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார். அதனால் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, குண்டூர் மாவட்டம் பெத்தகுபாடு பகுதியை சேர்ந்த கோபி என்பவர், வெங்கட்ரவம்மாவை சந்தித்து, ‘தான் மந்திரவாதி, சிறப்பு பூஜை மூலம் இறந்த சுதாகரை மீண்டும் உயிருடன் வரவழைப்பேன். பலரை உயிருடன் மீட்டுள்ளேன். உனது கணவர் சுதாகரையும் உயிர்ப்பிக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

மந்திரவாதியின் மாய வார்த்தைகளை நம்பிய வெங்கட்ரவம்மா, ‘இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.70 ஆயிரம் ஆகும்’ என்றுள்ளார். ‘அவ்வளவு பணம் தர என்னிடம் வசதி இல்லை. ரூ.50 ஆயிரம் தருகிறேன்’ என்று வெங்கட்ரவம்மா கூறினார். அதை ஏற்ற மந்திரவாதி கோபி, ‘வெங்கட்ரவம்மாவின் வீட்டில் மந்திர பூஜை செய்து ரூ.20 ஆயிரம் பெற்று கொண்டு, 4 நாட்களில் உனது கணவர் வருவார்’ என கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர், மறுநாள் மீதி ரூ.30 ஆயிரத்தை வசூலிக்க ரெட்டையா என்ற தனது சிஷ்யனை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே வெங்கட்ரவம்மாவின் வீட்டை தேடி அப்பகுதியில் சுற்றிசுற்றி வந்த ரெட்டைய்யா மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரி தாக்கினர். அப்போது, ‘கோபி போலி மந்திரவாதி என்பதும்,  இதுபோல் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதும்’ தெரிய வந்தது. இதையடுத்து ரெட்டையாவை போலீசில் ஒப்படைத்தனர். இதையறிந்த போலி மந்திரவாதி கோபி, தான் வாங்கிய ரூ.20 ஆயிரத்தை போன்பே மூலம் வெங்கட்ரவம்மாவிற்கு திருப்பி அனுப்பி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: