போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கும் இடத்தை சொல்லுங்க...: யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்தவர் கைது

திருவனந்தபுரம்: போலீசுக்கு தெரியாமல் கஞ்சா எங்கு வாங்கலாம்? என்று யூடியூப் மூலம் பிளஸ் 2 மாணவிக்கு தகவல் கொடுத்தவரை கலால் துறையினர் கைது செய்தனர். கேரளாவில் சமீப காலமாக கஞ்சா, கொக்கைன், எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தான் அதிக அளவில் இவற்றை பயன்படுத்துகின்றனர். கொச்சி, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் கலால் துறையினர் சோதனை நடத்தி போதை கும்பல்களை கைது செய்து வருகின்ற போதிலும் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, ‘தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்றும், போலீசுக்கு தெரியாமல் எங்கு வாங்கலாம்’ என கேட்டு கொச்சி மட்டாஞ்சேரியை சேர்ந்த பிரான்சிஸ் நெவின் (34) என்பவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். உடனே அவர், ‘எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அங்கு சென்றால் போலீசுக்கு தெரியாமல் கஞ்சா வாங்கலாம்’ என தனது யூடியூப் மூலம் மாணவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

தகவலறிந்து கலால் துறையினர், பிரான்சிஸ் நெவினின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து சிறிது கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பிரான்சிஸ் நெவினை கலால் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திருச்சூர் எஸ்பி ஐஸ்வர்யா டோங்க்ரே தெரிவித்தார்.

Related Stories: