பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி

மதுரை: மறைந்த அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர், அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன். அவர் பெற்ற வெற்றியை அதிமுக எப்போதும் மறக்காது.

என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன். பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக  ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம். அதிமுக தனிப்பட நபருக்கான கட்சி அல்ல, அது ஏழைக்கான கட்சி. அதிமுக தொண்டர்கள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர். பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் இவ்வாறு கூறினார்.

Related Stories: