தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்: புதிய மேம்பாலம் கட்டப்படுமா?

தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் ஒரு மாநகராட்சி பள்ளியும் 3 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மேலும், கொருக்குப்பேட்டையில் இருந்து வியாசர்பாடிக்கு இவ்வழியாக சரக்கு மற்றும் உணவுபொருள் கொண்டு செல்லும் ரயில்பாதையும் உள்ளது. இங்கு ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களும் பணியில் இருப்பதில்லை. இதையடுத்து, இப்பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இங்கு 2 மேம்பாலங்கள் கட்ட மண் பரிசோதனை நடைபெற்றது. அதன்பிறகு அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதுகுறித்து கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி எழுந்தபோது, தண்டையார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இங்கு புதிய மேம்பாலம் அமைக்க தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: