சோழவரம் லாரி பார்க்கிங் யார்டில் முகம் சிதைத்து வாலிபர் சரமாரி வெட்டி கொலை: 5 பேர் கும்பலுக்கு வலை

புழல்: சோழவரம் அருகே தனியார் லாரி பார்க்கிங் யார்டில் நேற்றிரவு ஒரு வாலிபர் முகம் சிதைத்து, சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாதவரம், சீதாபதி நகர், 16வது தெருவை சேர்ந்தவர் மதன் (எ) மதன்குமார் (35). இவர், சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் ஒரு தனியார் லாரி பார்க்கிங் யார்டில் வெளிமாநில லாரிகளை ஒழுங்காக பார்க்கிங் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அந்த லாரிகளில் வரும் இரும்பு கம்பிகளை சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக 4 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் முகம் சிதைத்த நிலையில், மதன்குமார் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட மதன்குமாரின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இந்த லாரி பார்க்கிங் யார்டில் நிற்கும் லாரிகளில் இருந்து பெறப்படும் இரும்பு கம்பிகளை சில்லறை விற்பனை செய்வதிலும், வெளிமாநில லாரிகளை பார்க்கிங் செய்து கட்டணம் வசூலிப்பதிலும் மதன்குமாருக்கும் மற்ற கோஷ்டிகளுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், லாரி பார்க்கிங் யார்டில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து, மதன்குமாரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி வெட்டுவது தெரியவந்தது. இதையடுத்து, தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: