உச்சநீதிமன்ற விசாரணையின் போது அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டாம்!: தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை வழக்கறிஞர்கள் வைக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் போது ஆஜராகும் சில மூத்த வழக்கறிஞர்கள், தங்களது வழக்குகளை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பர். சில நேரங்களில் மூத்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்கும் நீதிபதிகள், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளிப்பர்.

ஆனால் இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, அவசர வழக்கு கோரிக்கைகளை நீதிபதிகள் முன்பாக வைக்க முடிவதில்லை என்ற புகார் இருந்துவந்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வழக்குகளை விசாரித்து வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கு ஒன்றை அவசர வழக்காக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இனிமேல் யாரும் முறையிட வேண்டாம். நீதிமன்ற விசாரணையின் போது, இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம். இதனால் லிஸ்டில் உள்ள வழக்குகளை விசாரிப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேரடியாக முறையிட வேண்டும்.

அதற்கான விண்ணப்பத்தை எழுத்துபூர்வமாகவோ, வாய்மொழியாகவோ கூறலாம். அவர்கள் அதனை பரிசீலனை செய்து எங்களுக்கு அனுப்பட்டும். அதன்பின் வழக்குகள் விபரங்கள் பட்டியலில் தெரிவிக்கப்படும்’ என்று கூறினார். இதனால் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக் வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் நேரடியாக முறையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: