கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா

டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் (நேஷனல் பாங்க் ஓபன்) முதல் சுற்றுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்கு மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த மகளிர் முதல் சுற்றுப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவும், ரஷ்யாவின் டேரியா கசட்கினாவும் மோதினர். இதில் முதல் செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடி, அவரவர் கேம்களை தக்க வைத்துக் கொண்டனர். இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. டைபிரேக்கரில் தனது துல்லியமான சர்வீஸ்கள் மூலம் கசட்கினாவை திணறடித்த ஆண்ட்ரிஸ்கு, முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் மிகச் சரியான தருணத்தில் கசட்கினாவின் கேமை பிரேக் செய்து, 6-4 என அந்த செட்டை ஆண்ட்ரிஸ்கு கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள 2வது சுற்றுப் போட்டியில் அவர் பிரான்ஸ் வீராங்கனை ஆலைஸ் கார்னெட்டை எதிர்கொண்டு மோதவுள்ளார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், எஸ்டோனியாவின் கேயா கேன்பியும் மோதினர். இதில் முதல் செட்டை டை பிரேக்கரில் 7-6 என கேயா கேன்பி கைப்பற்றினார். 2வது செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக ஒசாகா அறிவித்தார்.

இதையடுத்து கேயா கேன்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஏடிபி தரவரிசையில் 15ம் இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் டீகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன், ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினா மோதினார். இதில் முதல் செட்டை ஃபோகினா 6-1 என கைப்பற்றி, ஸ்வார்ட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் அடுத்த 2 செட்களை 6-3, 6-4 என ஸ்வார்ட்ஸ்மேன் கைப்பற்றி, போகினாவின் வெற்றிக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Stories: