பேராசை..பெருநஷ்டம்: அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ.13,125 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்கள்..பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விளக்கம்..!!

சென்னை: அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி 3 நிதி நிறுவனங்கள் ரூ.13,125 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி நடந்தது எப்படி? என பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் விளக்கம் அளித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125 கோடி மோசடி?

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் ஒரு பகுதியையே வட்டியாக தந்து மோசடி செய்துள்ளது. 93,000 வாடிக்கையாளர்களிடம் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு பெற்றுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.85 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ரூ.150  கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருச்சி எல்பின் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி?

7,000 பேரிடம் பணம் வசூலித்து திருச்சி எல்பின் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் நிறுவனங்கள் சொத்து வாங்கி குவித்துள்ளன. அவற்றை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிதி நிறுவன மோசடியில் பல நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவனம் மோசடி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் எல்பின் நிறுவன மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வேலூர் ஐ.எப்.எஸ். நிறுவனம் ரூ.6,000 கோடி மோசடி?

வேலூர் ஐ.எப்.எஸ். நிறுவனம் ரூ.6,000 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி அரங்கேறியுள்ளது. ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் ரூ.27 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் முதலீடு செய்ததில் ரூ.6,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

சாத்தியமில்லா முதலீட்டு திட்டங்கள்- வழக்கு பதியலாம்:

வங்கிகள் 5.5 சதவீத வட்டிதான் டெபாசிட்டர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் ரிசர்வ் வங்கியின் உத்தரவு. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டிதான் வழங்க வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் உத்தரவு. பொதுமக்களின் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 24 சதவீத வட்டி தருவது என்பது சாத்தியமல்ல. நிறுவனம் சாத்தியமற்ற முதலீட்டு திட்டத்தை அறிவித்தால் அதன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாத்தியமில்லாத திட்டத்தை அறிவிக்கும் நிறுவனங்கள் மீது தானாக முன்வந்து போலீஸ் வழக்கு பதியலாம். சாத்தியமில்லாத திட்டங்கள் என்பதை அறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து சரியானதுதான். மோசடி நிறுவனங்கள் வேறு யார் பேரிலாவது சொத்துகள் வாங்கி உள்ளனவா? என்பதை கண்டறியும் பணி நடைபெறுகிறது.

முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா?

நிதி நிறுவன சொத்துகள் பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏமாற்று நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: