புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்துள்ளார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30க்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றிய நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரையாற்றினார்.

அப்போது பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். புதுவையில் மின்துறை தனியார்மயம், தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனதா கூட்டணி நிறைவேற்றவில்லை, பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை போன்ற காரணமாக வெளிநடப்பு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், ஆளுநர் உரையின் மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறும் எனவும் சபாநாயகர் செல்வம் அறிவித்தார். புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஆளுநர் உரை முடிந்தவுடன், அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும். பின்பு முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், மற்ற அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இன்று நடைபெற்ற பட்ஜெட் தொடரில் தேதி குறிப்பிடப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆளுநர் உரை மீதான விவாதம் அடுத்த இரண்டு நாள்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: