ராணிப்பேட்டை அருகே தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் தேநீர் கடையில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். வாணாபாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வீட்டின் ஒருபகுதியில் தேநீர் கடை ஒன்று வைத்துள்ளார். கடையில் பால் காய்ச்சுவதற்கென தனியறை ஒன்றில் கேஸ் அடுப்பும் வைத்துள்ளார். இன்று அதிகாலை வழக்கம்போல கடையை திறந்த செல்வராஜ், தேநீர் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் அருகே உள்ள பால்காய்ச்சும் அறையை திறந்து மின்விளக்கை ஒளிரச்செய்ய சுவிட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக உள்ளே இருந்த சமையல் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இதில் செல்வராஜ் மற்றும் தேநீர் பருக வந்த ராதாகிருஷ்ணன் என்பவர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மேலும் 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக விபத்து நேர்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிப்கார்ட் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: